‘கூடல் நகர்’ படத்தை இயக்கிய சீனுராமசாமி இயக்கும் இரண்டாவது படம் ‘தென்மேற்குப் பருவக்காற்று’. ‘ஜோதம் மீடியா ஒர்க்ஸ்’ சார்பில் கேப்டன் ஷிபு ஐசக், தயாரிக்கும் இப்படத்திற்கு என்.ஆர்.ரஹ்நந்தன் என்ற புதுமுக இசையமைப்பாளர் இசையமைக்க, படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார். முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில், இப்படத்தை வைரமுத்துவிற்கு இயக்குநர் போட்டுக் காட்டியுள்ளார். இடைவேளை இல்லாமல் முழுப்படத்தையும் பார்த்த வைரமுத்து கண் கலங்கிவிட்டாராம். காரணம், படத்தின் கதைக்களம் வைரமுத்து பிறந்த வடுகபட்டி கிராமம் என்பதால்தான். இயக்குநர் சீனுராமசாமியை அழைத்து மனதார பாராட்டிய வைரமுத்து, “சமரசம் செய்து கொள்ளாத படைப்பாளியாக சீனுராமசாமி திகழ்வது குறித்து மகிழ்கிறேன். மழைகூட நிராகரிக்கும் வறட்டுப் பிரதேசத்தில் நிகழும் இக்கதையைப் பார்த்த பிறகு மனசுக்குள் மழை பெய்கிறது. இதுவரை யாரும் சொல்லாத தளத்தில் காதல் கதை தடம் பதிக்கிறது. எனக்கு ஏற்பட்ட இதே உணர்வை ரசிகர்களுக்கும் இயக்குநர் ஏற்படுத்திவிட்டார் என்றால், மீண்டும் மற்றுமொரு பாரதிராஜா, பிறந்துவிட்டார் என்று தமிழுலகம் இயக்குநரைக் கொண்டாடும். சினிமாவை பார்த்து சினிமா உருவாக்கும் மோசமான கலாசாரம் உருவாகிவிட்ட இச்சூழலில், தனித்துவத்துடன் ஒரு துண்டு வாழ்க்கையைப் பதிவு பண்ணி இருக்கிற அபூர்வப்படமாக உருவாகியிருக்கிறது ‘தென்மேற்குப் பருவக்காற்று’ என்று கூறியிருக்கிறார். இந்த படத்திற்காக வட்டார வழக்குகளின் தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பாடல்களில் பயன்படுத்த முடிவு செய்திருக்கும் வைரமுத்து, இப்படத்திற்கு பாடல்கள் எழுத தனிமையான சூழலை ஏற்படுத்திக் கொள்ளப்போகிறாராம். அந்த அளவிற்கு வைரமுத்துவை பாதித்திருக்கும் இப்படத்தில் சேது நாயகனாகவும், வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள், இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
Categories: