கல்யாணத்திற்கு வந்தால் கூட்டம் கூடும், போக்குவரத்து பாதிக்கப்படும், மக்களுக்குச் சிரமம் என்று கூறி ரசிகர்களை திருமணத்திற்கு வர வேண்டாம் என ரஜினிகாந்த் கூறியதால் கடும் அதிருப்தி அடைந்துள்ள ரசிகர்களை சமாதானப்படுத்தும் வகையில் மகளையும், மருமகனையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க ஒரு கூட்டத்தைக்கூட்டத் திட்டமிட்டிருக்கிறார் ரஜினிகாந்த். சமீபத்தில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முதல் நாள் ரஜினி ஒரு அறிக்கை விட்டார். அதில் ரசிகர்கள் திருமணத்திற்கு வந்தால் போக்குவரத்து பாதிக்கப்படும், கூட்டம் கூடி விடும். எனவே அவர்களை அழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இது ரஜினி ரசிகர்களை பெரும் அதிருப்தியிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. முதல் மகளுக்கு நடந்த கல்யாணத்தின்போதும் தாங்கள் புறக்கணிக்கப்பட்டோம், இப்போது கடைசி மகளுக்கு நடந்த கல்யாணத்திற்கு வர வேண்டாம் என தலைவரே சொல்லி விட்டாரே என்று அதிர்ச்சி அடைந்தனர். புதுப் படம் வெளியாகும்போதும் நாம் கூடுகிறோம், அப்போதும் கூட்டம் கூடுகிறது, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது, மக்களுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது. அப்போதெல்லாம் தலைவர் இப்படிச் சொல்லவில்லையே என்று ரசிகர்களில் சிலர் வேதனைப்பட்டனர். ரசிகர்களின் இந்த புலம்பல் ரஜினி காதுகளுக்குப் போயுள்ளது. இதையடுத்து ரசிகர்களை சமாதானப்படுத்த அவர் இறங்கி வந்துள்ளார். அதாவது தனது மகளையும், மருமகனையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து, சிறப்பான விருந்து ஒன்றையும் அளித்து குஷிப்படுத்தத் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திருமணத்திற்கு வருகை தந்த முதல்வர் கருணாநிதி, மத்திய மாநில அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர், அரசு அதிகாரிகள் என அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். பரிசுப் பொருட்களை அனுப்பியவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், எனது மகளின் திருமண வைபவத்தை முன்னிட்டு, என்னுடைய ரசிகர்கள் அனைவரையும் குடும்பத்தினருடன் அழைத்து, மணமக்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி விருந்து வைக்க நான் ஆசைப்படுகிறேன். அது முடியுமானால், அதை நிறைவேற்ற நான் கண்டிப்பாக முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார். முடியுமானால் அழைத்து விருந்து வைக்கிறேன் என்று ரஜினி கூறியிருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தும் எனத் தெரிகிறது.
ரசிகர்களுக்கு விருந்து வைக்க ரஜினி திட்டம்!
எந்தப் போட்டியும் சந்திக்கத் தயார் – பத்மப்ரியா
ஒரே மாதிரி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்கிறார் பத்மப்ரியா. இது பற்றி அவர் கூறியது: ‘பொக்கிஷம்’, ‘தவமாய் தவமிருந்து’ படங்களில் ஹோம்லியாக நடித்தேன். தொடர்ந்து அதே போல் நடிக்க முடியாது. அதற்கு சிறிது பிரேக் தருவேன். ‘பழஸிராஜா’வில் அணிந்த பழங்குடி காஸ்ட்யூமை வேறு படத்தில் அணிய முடியாது. அதே போல் பாலியல் தொழிலாளி, கிளப் டான்ஸர் வேடங்களில் கிளாமர் காஸ்ட்யூம்தான் அணிய வேண்டும். அப்படியொரு கேரக்டர் வந்தால் கிளாமராக நடிப்பேன். தென்னிந்திய நடிகைகளுக்கு இந்தி சினிமாவில் எதிர்ப்பு இருக்கிறது என்கிறார்கள். அது பொய். நான் நடித்தபோது யாரும் எதிர்க்கவில்லை. ஒதுக்கவும் இல்லை. அசின், த்ரிஷாவும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து வந்து நடித்துக் கொண்டிருக்கிறார் கேத்ரினா கைப். அவரை யாராவது தடுத்தார்களா? போட்டி எல்லாத் துறையிலும் இருக்கிறது. சினிமாவில் அதிகம். அதை எதிர்ப்பு என்று சொல்ல முடியாது. எந்தப் போட்டியும் சந்திக்க நான் தயார். எத்தகைய வித்தியாசமான கேரக்டரிலும் நடிக்கும் துணிச்சல் எனக்கு இருக்கிறது. ஒன்று, கதை நன்றாக இருக்க வேண்டும். அல்லது வேடம் நன்றாக இருக்க வேண்டும். இரண்டுமே சரியில்லாத பட்சத்தில் அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன்.
சாமியைத் தொடர்ந்து அனகாவுக்கும் கொலை மிரட்டல்
இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் சர்ச்சைக்குரிய படமான சிந்து சமவெளி படத்தின் நாயகியாக அனகா நடித்திருந்தார். அமலா பால் என்ற பெயரில் வீரசேகரன் படத்தில் அறிமுகமான இவர், இந்தப் படத்தில் தனது பெயரை அனகா என மாற்றிக் கொண்டார். சிந்து சமவெளியில் மாமனாருடன் மருமகள் சல்லாபம் செய்யும் காட்சிகள் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. படத்தின் இயக்குநர் சாமிக்கு ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து நேற்று இயக்குநர் சாமி வீட்டில் கல்லெறி சம்பவங்களும் நடைபெற்றது. இந்நிலையில் படத்தில் மருமகளாக நடித்த அனகாவுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாம். இதுபற்றி அனகா அளித்துள்ள பேட்டியில், சிந்து சமவெளி படத்தின் கதை ஒரு கருத்தை போதிக்கிற கதை. மாமனார்-மருமகள் இடையே உறவு இருப்பது போல் கதை அமைந்திருந்தாலும், அந்த உறவினால் ஒரு குடும்பமே அழிந்து போவது போல் காட்டியிருக்கிறார்கள். இதுபோன்ற தப்பான உறவுக்கு இதுதான் தண்டனை என்ற கருத்து படத்தின் முடிவில் சொல்லப்பட்டு இருக்கிறது. நல்ல கருத்துடைய படம் என்பதால்தான் இந்த படத்தில் நடித்தேன். ஆனால், எனக்கு பல மிரட்டல்கள் வருகின்றன. படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்ப்பதற்காக, சென்னையில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்றிருந்தேன். அப்போது சில பெண்கள் என்னைத் திட்டினார்கள். கடந்த 2 நாட்களாக, போனில் மிரட்டல்கள் வருகின்றன. மாமனார்-மருமகள் இடையே கள்ள உறவு இருப்பது போன்ற கதையில் நீ எப்படி நடிக்கலாம். தமிழ் கலாசாரத்தை கொச்சைப்படுத்துகிற உன்னை தீர்த்துக்கட்டி விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். நான் ஒரு நடிகை. இயக்குநர் எப்படி நடிக்கச் சொல்கிறாரோ, அப்படி நடிக்கிறேன். இது, எப்படி கலாசார குற்றம் ஆகும்?, என்று கூறியுள்ளார்.
அம்பு விட்ட இயக்குநர், பறந்த கேரளத்து பைங்கிளி!
கேரளாவுக்குப் போய்விட்டார் மீராநந்தன். இது படப்பிடிப்பிற்காக அல்ல; மாறாக சோகத்தில் சென்னையை விட்டுப் புறப்பட்டுவிட்டார் என கிசுகிசுக்குது கோடம்பாக்கம். காரணம் கேட்டால் காதல் பிரச்சினையாம்! ‘வால்மீகி’, ‘அய்யனார்’ போன்ற இரண்டு படங்களில் நடிக்கும்போது கூட இத்தனை பிரச்சினை இல்லை அவருக்கு. ‘சூரியநகரம்’ படத்தில் நடிக்கும் போதுதான் இப்படி. அப்படத்தின் இயக்குநர் செல்லமுத்து தான் இந்த வில்லங்கத்துக்கு விந்திட்டவர். அவர் தன் காதலை சொல்ல அது மீரா நந்தனை கவலைக்குள்ளாக்கிவிட்டது. இப்படத்திற்காக 25 நாட்கள் கால்ஷீட் போதும் என்றுதான் முதலில் கேட்டு வாங்கினாராம் செல்லமுத்து. பின்பு அவ்வளவு சீக்கிரம் பேக்கப் பண்ண மனசில்லையோ என்னவோ, மீரா நந்தனின் கால்ஷீட் தேதியை அறுபது நாட்களை வரை இழுத்திருக்கிறார். இடையில்தான் இந்த காதல் அம்பு! சட்டென்று இதற்கு மறுப்பு தெரிவித்த மீரா, தனது போர்ஷனை எப்படியோ முடித்துக் கொடுத்துவிட்டு கேரளா சென்றுவிட்டார். இந்த விஷயம் வெளியில் கசிந்து முன்னணி வார இதழில் பெரிய கதையாகிவிட்டது. நான் சொல்லல என்று இரு தரப்புமே மோதிக் கொண்டாலும், மீராவின் மனசில் துளி கூட காதல் இல்லை என்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது. ஒன் சைட் லவ் தண்ணியடிக்க வேண்டுமானால் உதவும். படத்தை ஹிட்டாக்க உதவுமோ? ஆனால் அப்படி நம்பிக் கொண்டிருக்கிற இயக்குநர் செல்லமுத்து இன்னும் இது பற்றி மீடியாக்களிடம் புலம்பிவருகிறாராம். மீராநந்தனை தொடர்பு கொண்டு கேட்டோம். சார், அந்த படத்தோட தயாரிப்பாளர் ரொம்ப நல்லவரு. நிறைய செலவு பண்ணி இந்த படத்தை எடுத்திருக்கார். நான் ஏதாவது சொல்லப் போய் அது தயாரிப்பாளருக்கு தொல்லையா அமைஞ்சிரக் கூடாது. படம் முடியட்டும். பேசலாம் என்றார்.
லண்டன் டிரினிட்டி விருது பெற்ற ஹாரிஸ் ஜெயராஜ்
லண்டன் டிரினிட்டி கல்லூரி, 110 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. இளையராஜாவுக்கு கிளாஸிக்கல் கிடார் இசைப்படிப்பில், இந்த கல்லூரியில்தான் தங்கப்பதக்கம் கிடைத்தது. அந்த கல்லூரி சார்பில், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை தேர்வு செய்து விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. ஹாரிஸ் ஜெயராஜ், மணிசர்மா, எல்.சுப்பிரமணியம், வி.எஸ்.நரசிம்மன், பி.கணேஷ் குமார் போன்றோர் கவுரவிக்கப்பட்டனர். லண்டன் டிரினிட்டி கல்லூரி தலைமை செயல் அதிகாரி சாரா கெம்ப், பாடகிகள் தன்வி ஷா, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தா பாடல் வெளியீட்டு விழாவை சுவாரஸ்யமாக்கிய கார்த்தி
எதைச் செய்தாலும் அதில் ஒரு லாபத்தை பார்க்கும் மனிதர்களுக்கிடையே, தனது நண்பனுக்காக வேறு ஒரு தொழிலில் ஈட்டிய லாபத்தை வைத்து ஒரு படத்தை தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் ராஜேஷ் உத்தமன். இவர் தயாரித்திருக்கும் முதல் படம் ‘தா’ இப்படத்தை சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஆர்.கே.சூர்யபிரபாகர் இயக்கியிருக்கிறார். 12 ஆண்டுகளாக உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சூர்யபிரபாகரை இயக்குநராக்க வேண்டும் என்று இப்படத்தை தயாரிக்க முன்வந்திருக்கும் ராஜேஷ் உத்தமனும், சூர்யபிரபாகரும் நீண்டகால நண்பர்களாம். கோயமுத்துரை கதைக்களமாக கொண்ட இப்படத்தின் நாயகன் ஸ்ரீஹரி உட்பட படத்தில் பணியாற்றிய அனைவரும் கோயமுத்துரைச் சேர்ந்தவர்களாம். நாயகி நிஷா மட்டும் மும்பை வரவு. படத்தில் பணிபுரிந்தவர்கள்தான் கோயமுத்துரைச் சேர்ந்தவர்கள் என்றால் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட சிறப்பு விருந்தினர்கள், கே.பாக்யராஜ், நடிகர் கார்த்தி என கோயமுத்துரைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். அதுமட்டும் இன்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண்ணும் கோயமுத்துர் ஸ்டைலில் பேசி, வழக்கமான பாடல்கள் வெளியீட்டு விழாவாக இல்லாமல், விழாவை சற்று புதுமையாக்கினார்கள். இயக்குநர் சூர்யபிரபாகர் படத்தின் அனைத்து பாடல்களையும் எழுத, ஸ்ரீவிஜய் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் ஈழத்தில் பிறந்தவர். இதனாலயே ஜாலியானபோன விழாவில் சிறு சலசலப்பும் ஏற்பட்டது. முதலில் பேச வந்த ஆர்.கே.செல்வமணி “ஒரு குரல் வஞ்சகர்களாலும் துரோகிகளாலும் நசுக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஸ்ரீலங்காவிலிருந்து இங்கு வந்திருக்கும் ஸ்ரீவிஜய்யின் குரல் உலகமெங்மும் உள்ளவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு குரலாக இருக்கும் என்பது மட்டும் சத்தியம்” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், “ஆர்.கே.செல்வமணி சொன்னதில் ஒரு சிறு பிழை. ஸ்ரீவிஜய் ஸ்ரீலங்காவிலிருந்து வரவில்லை. ஈழத்திலிருந்து வந்திருக்கிறார். ஒரு குரல் நசுக்கப்பட்டது என்று சொன்னார் செல்வமணி, போராட்டத்தின் அந்த குரலை யாராலும் நசுக்க முடியாது. அது மீண்டும் மீண்டும் கர்ஜித்துக் கொண்டேயிருக்கும். இந்த படத்தின் இயக்குநரின் பெயர் சூர்யபிரபாகர். இப்போது புரிகிறதா ஏன் இந்த படத்திற்கு ஈழத்திலிருந்து இசையமைப்பாளர் வந்தார் என்று. அந்த பெயர்தான் இவரை ஈழத்திலிருந்து அழைத்து வந்திருக்கிறது” என்றார். இவர்களின் ஆக்ரோசமான பேச்சுக்கு பிறகு பேச வந்த நடிகர் கார்த்தி, எல்லா இளைஞர்களுக்கும் ஒரு குழப்பம். பிடிச்ச பிகருக்கு எப்படி ரூட் போடுறதுன்னு. அந்த குழப்பத்தை நான் தீர்த்து வைக்கிறேன் என்ற இந்த படத்தின் ட்ரெய்லர்ல சொல்லியிருக்காங்க. நாட்ல ரொம்ப பேருக்கு அதுதான் பிரச்சினையா இருக்கு. அதை தெரிஞ்சுக்காவாவது இந்த படத்துக்கு திரளா வருவாங்க என்ற கார்த்தி, எனக்கும் இப்படி ஒரு குழப்பம் இருக்கு. நானும் தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருக்கேன் என்று சொல்ல, கூடியிருந்த கூட்டம் தன்னையறியாமல் கைதட்டியது. தனது உரையில் தன்னை வருங்கால மக்கள் திலகம் என்று வர்ணித்த வி.சி.குகநாதனுக்கும் நன்றி சொன்னார் கார்த்தி.
படமாகிறது நித்யானந்தா கதை!
நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையறையில் இருப்பது போன்று வெளியான வீடியோ படகாட்சிகளால் பரபரப்பாகப் பேசப்பட்டவர் நித்யானந்தா. அவரது கதையை தெலுங்கில் படமாக எடுக்கின்றனர். நித்யானந்தா வேடத்தில் ராஜேந்திரபிரசாத் நடிக்கிறார். இவர் தெலுங்கு திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக உள்ளார். முக்கிய கேரக்டரில் சிவாஜி, சாய்குமார் நடிக்கின்றனர். நித்யானந்தா கதை இப்படத்தில் துணை கதைபோல் உருவாக்கப்பட்டு உள்ளதாம். இந்தப் படத்தின் பூஜை இரு தினங்களுக்கு முன் ஐதராபாத்தில் நடந்தது. அவ்விழாவுக்கு ராஜேந்திர பிரசாத் நித்யானந்தா கெட்டப்பில் வந்தாராம். நித்யானந்தாவின் முழு வாழ்க்கையும் படமாக்கப்படுகிறதா? அல்லது ரஞ்சிதா சம்பந்தப்பட்ட பகுதி மட்டும் படமாக்கப்படுகிறதா? என்று கேட்டபோது படக்குழுவினர் பதில் சொல்ல மறுத்துவிட்டனர். ரஞ்சிதா கேரக்டரில் நடிக்கும் நடிகையை தேர்வு செய்து வருகிறார்களாம்.
நகரம் பாடல் வெளியீட்டு விழாவில் கமல்
வைரமுத்து பார்த்து ஒரு படம் ஓடும் என்று சொன்னால் நிச்சயம் ஓடும் என்றார் நடிகர் கமல்ஹாஸன். சுந்தர் இயக்கும் நகரம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் முதல்வருடன் மேடையேறிய கமல்ஹாஸன் பேசியது: “சுந்தர் சி. குறிப்பிட்டது போல் வைரமுத்து அரவணைத்த இயக்குநர்களில் நானும் ஒருவன். நான் எழுதிய கவிதைகளை, அவரிடம் காட்டி பிழைகளை திருத்திக் கொண்டிருக்கிறேன். கலைஞர் வசனங்களை மனப்பாடம் செய்ததுபோல், வைரமுத்துவின் கவிதைகளையும் மனப்பாடம் செய்து இருக்கிறேன். பிற்காலத்தில், அந்த கவிதை எழுதியவர் என் படத்துக்கு பாடல் எழுத வேண்டும் என்று கேட்டு இருக்கிறேன். அப்போது ஏற்பட்ட நட்பு, வைரமுத்துவுடன் இன்னும் தொடர்கிறது. மேலும் தொடரும். இப்போது இந்த மேடையில் சந்திப்பது போல், எப்போது வேண்டுமானாலும் மிகச் சுலபமாக சந்திக்க முடிகிற முதல்வர், கலைஞர். இப்படி ஒரு முதல்வர் மற்ற மாநிலங்களில் இருப்பார்களா எனத் தெரியாது. இவர், எங்களில் ஒருவராக இருக்கிறார். வைரமுத்து, சிறந்த திறனாய்வாளர். அவர் ஒரு படம் ஓடும் என்று சொன்னால் ஓடும். இந்த படத்தை அவர் பார்த்து விட்டு, வெற்றி பெறும் என்று சொல்லியிருக்கிறார். அதனால், படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” என்றார் கமல். நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து பேசும்போது, “சுந்தர் சி. புத்திசாலி. குஷ்புவை திருமணம் செய்ததால், அவர் அதிர்ஷ்டசாலி. இளம் இசையமைப்பாளர்கள் இசையமைக்கும்போது, பாடல்களின் வரிகள் கேட்கிற மாதிரி இசையமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார். படத்தின் தயாரிப்பாளர் நடிகை குஷ்பு நன்றி தெரிவித்து பேசியது: “நான் தயாரித்த முதல் படம், ‘கிரி’. ஒரு நடிகை படம் தயாரித்தால் ராசியிருக்காது என்று அப்போது பேசினார்கள். ஆனால், ‘கிரி’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து நான் படம் தயாரித்து வருகிறேன். ‘நகரம்’ என் தயாரிப்பில், 5-வது படம். என் கணவர், ‘தலைநகரம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அவர் கதாநாயகனாக நடிப்பது முதலில் எனக்குத் தெரியாது. மிக தாமதமாகத்தான் எனக்குத் தெரியவந்தது. முதல் படத்திலேயே நடிப்பில், அவர் வெற்றி பெற்றார். இந்த படம் வெற்றி பெற்றால், அதற்கு முழு காரணம் சுந்தர்தான்…,” என்றார். விழாவில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், படத்தின் கதாநாயகி அனுயா, இசையமைப்பாளர் தமன் மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.
தலைவா இது தகுமா?
(தனது மகளின் திருமணத்துக்கு வர வேண்டாம் என்ற ரீதியில் ரஜினி வெளியிட்ட அறிக்கை குறித்து ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கடித வடிவிலான கட்டுரை)
அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!
உங்களிடம் நேரில்தான் பேசவே முடியாதே… சில விஷயங்களை மனசைவிட்டு தங்களின் காலடியில் இறக்கிவைக்கவே இந்தக் கடிதம்! தமிழகத்தில் நிறைய அரசியல்வாதிகள் தலைவராக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், எல்லோரையும் யாரும் இப்படி அன்பொழுக அழைப்பது இல்லை. எந்தக் கட்சியையும் தொடங்காதபோதே, ‘தலைவா’ என்று உயிர் உருக உங்களை அழைத்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒரு துளி நான்.
நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா தலைவரே? நாங்கள் சந்தோஷமாக இல்லை! ‘போக்குவரத்து நெரிசல், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் மகள் திருமணத்துக்கு வரவேண்டாம்’ என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இதே அறிக்கையை உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது விடுவீர்களா? அப்போதும் தியேட்டரைச் சுற்றிலும் கூட்டம், போக்குவரத்து நெரிசல், பிதுங்கும் ஜனத்திரள் எல்லாமே இருக்குமே!
இந்த நேரத்தில், மூத்த மகள் மணவிழா சென்னை பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் ஹாலில் நடந்ததும் ஞாபகம் வருகிறது. கோட்டு சூட்டு போட்டவர்களையும், கார்களில் வந்தவர்களையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றீர்கள். ஆனால், நாங்களோ மண்டப வாசலிலேயே சத்யநாராயணா மூலம் கெடுபிடியாக வெளியே தள்ளப்பட்டோம். வெள்ளித் திரையில் உங்களுக்கு கற்பூர ஆரத்தி எடுத்த எங்களின் கண்களில், கண்ர்த் திரை அப்போது வழிந்தது நிஜம். உங்களின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஊருக்கே சோறு போட்டவர்கள், ‘உள்ளே வராதே’ என்று விரட்டி அடிக்கப்பட்டோம்.
அதே மண்டபத்தில் நடிகர் பிரபுவின் மகன் கல்யாணம். திருமணத்துக்கு முதல் நாள் ரசிகர்களை மண்டபத்துக்கு அழைத்து, மணமக்களை அறிமுகப்படுத்தி விருந்து கொடுத்தார். அந்த பாசத்தை உங்களிடம் நாங்கள் எதிர்பார்த்தது தவறா? ரசிகன் கட்டும் தோரணம் வேண்டும்… கட்-அவுட் வேண்டும்… டிக்கெட் காசு வேண்டும்… நாங்கள் மட்டும் வேண்டாமா? பெரிய பெரிய வி.ஐ.பி-க்களோடு எங்களைச் சேர்த்து வைத்து வரவேற்க வேண்டாம்… உங்கள் குடும்பத்தின் இந்த சந்தோஷ நிகழ்ச்சியை முன்னிட்டு எங்களுக்கென்று தனியாக ஓரிரு மணி நேரம் நீங்கள் ஒதுக்கக் கூடாதா? மேடைகளிலும், அறிக்கைகளிலும் உங்களைத் தூற்றி நகையாடியவர்களுக்குக்கூட நேரில் போய் பத்திரிகை வைத்தீர்களே… தூஷித்தவர்களுக்கு விருந்து வைத்து போஷிக்கிறீர்கள்…… உங்களை வாரி அணைத்தவர்களை வாசலுக்கு வெளியே நிறுத்தலாமா?
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். நீங்கள் திடீரென்று விமான நிலையத்தில் ஸ்டைலாக நின்றுகொண்டு, ‘இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு’ என்று போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிடுவீர்கள். உங்கள் வார்த்தையை உயிராய் சுமந்து ஓடியாடி உழைப்போம். அரசியல்வாதிகள் எங்களைத் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கறிவேப்பிலையாகத் தூக்கி வீசிவிடுவார்கள். ஒரு தடவை தி.மு.க-வை ஆதரிக்கச் சொல்வீர்கள். அடுத்த தரம், ஜெயலலிதா வீட்டில் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும் போட்டோ ரிலீஸ் ஆகும். எது சொன்னால் என்ன… மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக ஆடி, கடைசியில் சொந்தக் காசில் சூடு வைத்துக்கொள்வோம்!
நிதானமாக யோசித்தால், ஒன்று புரிகிறது… நீங்கள் தெளிவினும் தெளிவு. உங்கள் ஒவ்வொரு படம் வரும்போதும், ரசிகர்களின் மனசைக் கரைத்து விடுவீர்கள். கடந்த முறை ‘குசேலன்’ படம் ஓடத் திட்டமிட்டு, கரிசனம் காட்டித் திடீரென ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து, ‘என்னையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது.’ என்று சொல்லி, கோடம்பாக்கத்தையே கொடைக்கானல் ஆக்கினீர்கள்! ஆனால், ஒரு படம் ஓகோவென ஓடினால் நன்றி சொல்ல அழைத்தது உண்டா? வெற்றிச் செய்தி காதில் விழுந்ததுமே இமயமலையில் கால்வைத்து விடுவீர்கள்!
உங்களை கேவலமாகத் திருமாவளவன் வசை பாடியபோது, கோபமாகி எதிர்த்தோம். விளைவாக, கட்சியினரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்தோம். நீங்கள் ஒரு வார்த்தையாவது ‘என்னாச்சு?’ என்று கேட்டதில்லை. இன்று வரை பகை நெருப்புபற்றி எரிகிறது எங்களுக்குள். ஆனால், பெரியவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். திருமாவின் வீடு தேடித் திருமண அழைப்பு தருகிறீர்கள். ஆனால், அன்று எங்களை அடித்தவர்கள், இன்று மறுபடியும் எங்களைப் பார்த்து மிகக் கேவலமாகச் சிரித்தபடி ‘எங்க பவர் புரியுதா?’ என்று வாய் கூசாமல் கமென்ட் அடிக்கும் போது உயிரோடு போட்டுச் சிதைப்பது போல் இருக்கிறதே தலைவா!
‘பாபா’ படம் வந்தபோது, வட மாவட்டங்களில் கலவரம் தலைவிரிக்க… பா.ம.க-வினர் அரங்குகளில் படப் பெட்டிகளையே தூக்கினர். தடுத்த எங்களுக்கு அடி, உதை… ரத்தக் கசிவு நின்றாலும், வடுக்கள் இன்னும் உடலில்! இப்போது நீங்களோ அன்புமணி இல்லம் தேடிப் போய் அழைப்புவைத்து அளவளாவுகிறீர்கள்! ‘பகையைப் பாராட்டாத பரந்த உள்ளம்’ என்றும் ‘நாகரிகம் அறிந்த நல்ல மனிதர்’ என்ற பெயர்கள் உங்களுக்குக் கிடைக்கலாம்… ஆனால், காயம்பட்ட எங்களை மட்டும் சுத்தமாகப் புறக்கணிக்கும்போது நெஞ்சில் ரத்தக் கண்ர் வடிகிறதே!
எங்களைப் பார்த்து வளர்ந்த விஜயகாந்த் ரசிகர்கள்கூட கரை வேட்டி கட்டிக்கொண்டு, எங்களை ஏதோ காயலான் கடை பொருள்போல ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள?
எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொண்டு திரும்பத் திரும்ப உங்கள் பின்னால் இன்னும் எத்தனை நாளைக்கு நாங்கள் ஓடி வர முடியும்? காலம் எல்லாம் தாங்கிக்கொண்டு சும்மா இருக்க எங்களுக்கு ‘எந்திர’ இதயம் இல்லையே! அது ரத்தமும் சதையினாலும் அல்லவா ஆனது?
ரஜினியின் அடுத்த மூவ் என்ன?
மகள் கல்யாணம் முடிஞ்சாச்சு; அடுத்து எந்திரன்; எந்திரனுக்குப் பிறகு? ரஜினி பற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் அவரது இலக்கு சினிமா அல்ல என்று கோடம்பாக்கத்திலிருந்து வருகின்றன சில தகவல்கள்! அப்படின்னா? ஹையா… ஜாலி என்று ரசிகர்கள் ஆனந்தப்படவும் முடியாது. ஏனென்றால் அவரது இலக்கு அதுவும் இல்லையாம். இமயமலைக்கு போய் சாமியாராயிடுவார்னு சொல்லப் போறீங்க. வேற வேலை இருக்கு. ஆள விடுங்கப்பா என்று அடுத்த செய்திக்குத் தாவுகிற அன்பர்களுக்கு…. ரஜினி தனது குடும்பத்தினர் அனைவருக்குமான சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்துவிட்டாராம். மகள்கள் இருவருக்குமான சொத்துக்களை பிரித்துக் கொடுப்பது ஒரு தகப்பனின் கடமைதான். ஆனால் தனக்கும் மனைவிக்கும் கூட தனித்தனியாக சொத்துக்களை பிரித்துக் கொடுத்திருப்பதாக உலா வரும் செய்திகள்தான் சிந்திக்க வைக்கின்றன. இமயமலை அருகில் ஒரு பெரிய இடத்தையே சொந்தமாக வாங்கிப் போட்டிருக்கும் ரஜினி அங்கே ஒரு கோவிலையும் கட்டி வருகிறாராம். இனி வருடத்திற்கு ஒருமுறையோ, அல்லது இருமுறையோதான் சென்னைக்கு வருவாராம். மற்ற நாட்கள் எல்லாம் அவருக்கு அதுதான் வாசஸ்தலம் என்கிறார்கள். தலைவரு பத்தி எவ்வ்வ்வளவோ சொல்லிட்டாங்க. இப்போ இதுவுமா? நீங்க பாட்டுக்கு எழுதுங்க. அவரோட ரூட்டே தனிதான் என்று இப்போதும் நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள் அவரது தீவிரமான ரசிகர்கள்! அரசியலா? ஆன்மீகமா? இந்த கேள்விக்கு பதில் ரெடி!
Categories: